அமைச்சர் உதயநிதிக்கு அமலாக்கத்துறை ரெய்டு பயம்… இது சந்தர்ப்பவாத அரசியல் ; பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்…!
Author: Babu Lakshmanan9 January 2024, 4:57 pm
மதுரை ; அமலாக்கத்துறைக்கு பயந்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கு உதயநிதி நேரில் அழைப்பு விடுத்ததாக அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் நடைபெற உள்ள எஸ்பிபிஐ கட்சியின் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டிற்கு திருப்பூரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இன்று புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாநாட்டுக்கு செல்பவர்களை வழி அனுப்பி வைத்த பின்னர், அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது :- இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்றனர். அமலாக்கத்துறை தங்கள் மீது பாய்ந்து விடும் என்ற பயத்தில் பாஜகவை குற்றம் சாட்டி வந்த உதயநிதி, தற்போது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கு நேரில் சென்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது சந்தர்ப்பவாத அரசியல்.
அதிமுக துவங்கியது முதல் தற்பொழுது வரை இஸ்லாமியர்களுடன் நல்ல உறவு உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவுடன் சிறுபான்மை இன மக்களை ஒரு சிலர் ஏமாற்றி விடுகிறார்கள். தேர்தல் வரும் பொழுது திமுகவின் சாயம் வெளுத்து விடும். எடப்பாடியார் காலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சிறப்பான முறையில் பொங்கல் சிறப்பு பரிசு பணம் வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர், என குற்றம் சாட்டினார்.