CM ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியும் வேலை நடக்கல… வெற்றிலை, பாக்கு வைத்து கூப்பிடனும் ; விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan4 January 2024, 7:30 pm
ஜல்லிக்கட்டு விழாவிற்கு ஜாதி மதம் மட்டுமல்ல, கட்சி பாகுபாடு இன்றி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விழாவாக இந்த விழா இருக்க வேண்டும் எனும் உயர்நீதிமன்றம் கூறும் கருத்தை வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரத்து செய்து பாரம்பரிய முறையில் மீண்டும் டோக்கன்களை விழா கமிட்டியினரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சந்தித்து இது குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் பாஸ்கர் கூறியதாவது :- ஜல்லிக்கட்டு விழாவிற்கு ஜாதி மதம் மட்டுமல்ல கட்சி பாகுபாடு இன்றி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விழாவாக இந்த விழா இருக்க வேண்டும். உயர்நீதிமன்றம் கூறும் இந்த கருத்தை நான் வரவேற்கின்றேன். தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு நாங்கள் அழுத்தமான கோரிக்கை விடுத்ததன் காரணமாக மார்ச் மாதத்திற்கு பின் இந்த ஆன்லைன் முறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவுகள் எடுத்து வருவதாக தெரிகிறது. இது தவிர்க்கபட வேண்டும், பாரம்பரிய முறைப்படி, வெற்றிலை பாக்கு வைத்து கிராம கமிட்டியாளர்கள் காளைகளை அழைத்து போட்டி நடத்தும் முறையை அமல்படுத்த வேண்டும்,
இந்த அரசு முக்கியமான எந்த வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. அதில் ஒன்றாகத்தான் காளைகள் வளர்ப்போருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்டும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றபடவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும்.
மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்திலேயே இரண்டாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கியது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கட்டுமான பணிகள் மந்த நிலையில் நடைபெற்று, கடந்த மாதம் தமிழக முதல்வர் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தொடங்கி வைத்தார். ஆனால், இதுவரை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி செயல்படவில்லை. மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவர்கள் யாரும் இங்கு வரவில்லை. மேலும், முதலமைச்சர் திறந்து வைத்த பின்னரும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்படாமல் உள்ளது வேதனைக்குரியதாக உள்ளது.
இதேபோன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு விழா கமிட்டி எந்த தேதியில் கேட்கின்றனரோ, அந்த தேதியில் அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு உண்டான சான்றிதழ்களை அனைத்து துறைகளிலும் உடனடியாக பெறுவதற்கு எளிய முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.