எம்ஜிஆர் – நம்பியார் போல சண்டை வேண்டாம்… தொண்டர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் வேண்டுகோள்..!!
Author: Babu Lakshmanan30 March 2024, 1:45 pm
திண்டுக்கல்லில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் நேர் எதிரே சந்தித்த பொழுது எம்ஜிஆர் நம்பியார் போல சண்டையிட வேண்டாம் என தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார்.
திண்டுக்கல் மாநகரத்தில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சச்சிதானந்தம் மற்றும் அதிமுக கூட்டணியை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நெல்லை முபாரக் ஆகியோர் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக கூட்டணி வேட்பாளரான நெல்லை முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் தெற்கு பகுதியிலான மேட்டுப்பட்டி, குள்ளனம்பட்டி, பாரதிபுரம் நாகல்நகர் அனுமந்த நகர் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சாமியார் தோட்டம் அருகே உள்ள ராஜலட்சுமி நகரில் இரு வேட்பாளர்களும் நேர் எதிரில் செல்லும்பொழுது, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்க் கட்சியினருக்கு வாழ்த்துக்கள், நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கி போய் விடுவோம் என பேசியதை கேட்டு வேட்பாளர் உட்பட பிரச்சாரத்திற்கு வந்த அனைவரும் குழம்பினர். மேலும், எம்ஜிஆர், நம்பியார் போல சண்டையிட்டு கொள்ள வேண்டாம் என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.