முதலமைச்சரை மதிக்காத எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்… கேலி, கிண்டல் பேசும் அமைச்சர்கள் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
4 October 2022, 9:43 pm

அமைச்சர்கள் மத்தியில் கேலி கிண்டல்கள் அதிகமாகிவிட்டதாகவும், அதை அழைத்து கண்டிக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை விடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆயுத பூஜையை கொண்டாடினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- ஜெயலலிதா செயல்படுத்திய திருமண நிதியுதவித் திட்டம் சிறப்பான திட்டம். அதை விடியாத திமுக அரசு நிறுத்திவிட்டது. தற்போது மாணவிகளுக்கான நிதியுதவி திட்டம் யானைப்பசிக்கு சோளப்பொறி போல தான். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் கூட அதில் பலன் பெற முடியவில்லை.

அதிமுக அரசில் அறிவித்த இலவச திட்டங்களில் கூட இலவசம் என்பதற்கு பதில் விலையில்லா என்ற வார்த்தையை தான் ஜெயலலிதா பயன்படுத்தினார். ஆனால் இன்று அமைச்சர் ஓசி என்கின்றனர். ஓசி எனக் கூறிய அமைச்சர் பொன்முடியையும், மேயரை மரியாதைக்குறைவாக நடத்திய நேருவையும் முதலமைச்சர் கண்டிக்க வேண்டும்.

திமுக மக்கள் பிரதிநிதிகள் யாரும் முதலமைச்சரை மதிப்பதில்லை. அமைச்சர்கள் மத்தியில் கேலி கிண்டல்கள் அதிகமாகிவிட்டன. அதை அழைத்து கண்டிக்காமல் அறிக்கை விடுகிறார் முதலமைச்சர். இந்த ஆட்சியில் அடாவடி, அராஜகம், அத்துமீறல்கள் தான் நடந்து கொண்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் கைது செய்யயப்பட்டனரா? என கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழ்நாடு அரசின் காவல்துறைக்கு விருது பெரும் அளவிற்கு சட்டத்தின் ஆட்சியை நடத்தியவர் இபிஎஸ். டிடிவி தினகரன் தொடை நடுங்கியாக இருக்கலாம். மக்கள் பிரச்சனைகளுக்காக தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியது யார்? ஓபிஎஸ் அறிக்கை, டிவிட்டரை தான் நம்புகிறார் ஓபிஎஸ். தொண்டர்களை அல்ல.

அனைத்துக் கட்சிக்கும் சென்று வந்தவர் ஜேசிடி பிரபாகர். தற்போது ஊரை அடித்து உலையில் போட்டவர்களிடம் இருந்து பேசுகிறார். நிறைவேற்ற கூடிய சாத்தியக்கூறான திட்டங்களை தான் அதிமுக அறிவிக்கும். அதற்குரிய செலவினங்களை தேர்தல் ஆணையத்திடம் மட்டுமல்ல, யாரிடம் வேண்டுமானாலும் அளிப்போம்.

ஓபிஎஸ் எந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினாரோ அதே குடும்பத்திடம் காலில் விழுந்து முதலமைச்சராக்குங்கள் என கேட்கிறார். மு.க.ஸ்டாலினுக்கும், ஒபிஎஸ் – சசிகலா – டிடிவிக்கும் இடையே அதிமுகவை அழிக்க வேண்டும் என எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் 80% முடிவடைந்து விட்டதாக கூறுகிறார் முதலமைச்சர். பருவ மழை வந்தால் மழைநீர் வடிகால்களின் பணி குறித்த நிலை வெட்ட வெளிச்சமாகிவிடும், என்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 412

    0

    0