ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை… ஒட்டுமொத்த இயக்கமே இபிஎஸ் பின்னால் இருக்கு ; கடம்பூர் ராஜு!!

Author: Babu Lakshmanan
20 January 2024, 9:06 am

ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை என்றும், ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகையும், நிவாரணமும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அவர் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அதிகப்படியான மழைப்பொழிவு, நூற்றாண்டு காலம் இல்லாத அளவு தூத்துக்குடி மாவட்டம் சந்தித்தது குறிப்பாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவானது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக 50 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன் விளைவாக மாவட்டத்தின் பல இடங்களில் அதிகமான கண்மாய்கள் உடைப்பு, சாலைகள் சிதலமடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் தீவு போல துண்டிக்கப்பட்டு மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்து குறிப்பாக விவசாய பெருங்குடி மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்றார். குறிப்பாக, கோவில்பட்டி பகுதியில் மானவாரி விவசாயம் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் முழுமையாக பாதிக்கப்பட்டது. தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகையும் நிவாரணமும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி இன்றைய தினம் மனு அளித்துள்ளோம்.

குறிப்பாக, மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் சீர் செய்ய வேண்டும். விவசாயிகள் பயிற்சேதம் மற்றும் உப்பளங்கள் வரலாறு காணாத அளவில் அதிகம் சேதம் அடைந்துள்ளது. அவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர மாவட்ட ஆட்சியர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பெற்று தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

விரைவில் சட்டமன்றம் கூட உள்ள நிலையில் இதுகுறித்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். அரசு தற்போது வழங்கியுள்ள நிவாரணத் தொகை போதாது. அதிலும் பாரபட்சமாக மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் 5 தாலுகாக்களுக்கு மட்டும் ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 5 வட்டங்களுக்கு ரூபாய் ஆயிரம் மட்டுமே நிவாரணம் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரபட்சமான நிலைப்பாடு.

கோடநாடு என்பது தனிப்பட்ட சொத்து அம்மா அவர்கள் அம்மா அவர்களோடு இணைந்து சேர்ந்து வாங்கப்பட்ட டிரஸ்டின் மூலமாக அதில் அவர்கள் உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினால் அங்கே சென்று மேம்பாட்டு பணிகளை செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. அம்மாவின் மேல் உள்ள விசுவாசத்தின் காரணமாக இப்பணியை செய்தால் நல்லது தான். அம்மாவிற்கு யார் பெருமை சேர்த்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை. நீதிமன்றத்தில் அனைத்து தீர்ப்புகளும் வந்தாகிவிட்டது. ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது. 100 சதவீத தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பின்னால் இருக்கின்ற நேரத்தில் யாரை வைத்து அவர் (ops) அரசியல் செய்யப் போகிறார், என்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 443

    0

    0