போதைப்பொருட்களின் மூலம் மட்டும் ரூ.1.50 லட்சம் கோடி சம்பாதித்த திமுக ; முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan4 March 2024, 9:43 pm
திமுக அரசு போதைப்பொருட்களால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சம்பதித்துள்ளதாக தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அரசினை கண்டித்து இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மகளிர் அணி மாணவர் அணி சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது எனவும், பள்ளி பயிலும் மாணவர்கள் கைகளிலும் எளிதாக போதைப்பொருட்கள் கிடைக்கும் வகையில், தற்போது தமிழகம் போதைப்பொருளால் சீரழிந்து வருகிறது எனவும் கூறினார்.
மேலும், போதைப் பொருளால் ஒன்றரை லட்சம் கோடி வரை திமுகவிற்கு லாபம் கிடைத்துள்ளதாகவும், போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதீக் முதலமைச்சர் குடும்பத்துடன் பழகி வந்துள்ளதாகவும், அனைவரிடமும் பழகிய ஒரு நபர் போதைப்பொருள் கடத்தல் மன்னனாக உள்ளார் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் கட்சி தொண்டர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.