ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாதோ, அதுக்கு உதாரணம் தான் திமுக ஆட்சி.. சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது ; நத்தம் விசுவநாதன் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan27 October 2023, 11:32 am
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து சிரிக்கிறது என முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு அதிமுக கட்சி தொடங்கி 52வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர், முன்னாள் எம்.பி உதயகுமார், நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன் ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் செயலாளருமான நத்தம் இரா. விசுவநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழகத்தில் நடைபெற்று இருக்கின்ற ஆட்சியில், ஒரு ஆட்சி எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்று அது திமுக தான். சிறந்த ஆட்சி செய்வதற்காக ஒரு கட்சி என்றால் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் ஆட்சியும், எடப்பாடியார் ஆட்சியும் உதாரணமாக கூறலாம்.
அதிமுக கட்சியின் உருவெடுத்திருக்கின்ற முன்னாள் முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் பல்வேறு திட்டங்களை, மாநில அரசுக்கு பல்வேறு நிதி நெருக்கடி எல்லாம் இருந்தாலும் கூட, அத்தனையும் சமாளித்து தன்னுடைய நிர்வாக திறமையாலும், மருத்துவ கல்லூரிகளே ஒரே நேரத்தில் ஏற்ப நிவாரணம் பெறுகின்ற வகையிலே, யாரும் சொல்லவில்லை, எந்த அதிகாரிகளும் சொல்லவில்லை, எந்த அரசியல்வாதிகளும் எடப்பாடியாருக்கு ஆலோசனை சொல்லவில்லை.
தன்னுடைய சிந்தனையினாலே உதித்த அற்புதமான திட்டம் அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு 7.5% இட ஒதுக்கீடு கொடுத்து இன்றைக்கு வரலாற்று சிறப்புமிக்க ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் அருமை எடப்பாடியார் ஆட்சி செய்தார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எண்ணற்ற வாக்குறுதிகளை ஏறத்தாழ 520 வாக்குறுதிகளை இன்றைக்கு அள்ளிவிட்டு, 520 வாக்குறுதிகளையும் என்றைக்கும் நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகள் எல்லாம் சொல்லி, மக்களை ஏமாற்றி இன்றைக்கு நாடகமாடி உங்களுடைய ஓட்டுக்கு வாய்ப்பு பெற்றார்கள்.
வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி பெற்றார்கள். செயல்படுத்த முடியாத திட்டங்களை எல்லாம் சொல்லி நம்ப வைத்து இன்றைக்கு வந்திருக்கிறார். அதில், 99 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று அண்ட புளுகு, ஆகாச புளுகு, கொஞ்சம் கூட கூசாமல் இப்படிப்பட்ட ஒரு பொய்யான முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்ப அட்டைக்காரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும் எனக் கூறி விட்டு, தற்போது அனைத்து குடும்பங்களும் சொல்லிவிட்டு, இப்பொழுது மகளிர் உரிமைத்தொகை வர தகுதியின் அடிப்படையில் ஒரு கோடி பேருக்கு வழங்கிவிட்டு ஒரு கோடி குடும்பத்தார்களை ஏமாற்றி விட்டனர்.
திமுக என்றாலே வாயிலையே வடை சுடும் அளவுக்கு பொய் பிரச்சாரத்தை செய்து வருவார்கள். அதை செய்தும் காட்டுவார்கள். எப்படியெல்லாம் மக்களை திறமையாக ஏமாற்றுவதோ, அதை எல்லாம் ஏமாத்தறதுக்கு பேரு திராவிட மாடல். அந்த வகையில் திராவிட மாடல் என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இப்பொழுது எங்கு பார்த்தாலும் திமுக பிரச்சாரம் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிவிட்டு, தற்போது அதற்கு மிகுந்த பொய்யைச் பிரச்சாரமாக செய்து வருகின்றனர்.
திமுகவினுடைய ஆட்சி மக்கள் விரோத ஆட்சி மட்டுமல்ல, ஒரு ஆளு ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு இந்த திமுக ஆட்சி தான் உதாரணம். சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும், எது கிடைக்குதோ இல்லையோ, மதுபாட்டில் தெருவுக்கு தெரு, எங்கே போனாலும் பெட்டிக்கடைகளில் கள்ளசந்தை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், இப்படி சமூக விரோதச் செயல், இன்றைக்கு அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. என்று சொன்னால் அதற்கெல்லாம் முழுக்காரணம் போதை தான். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரங்கள் எல்லாம் பறித்து, நிம்மதி இல்லாமல் திமுகவினர் மக்களை போதையிலேயே வாழ வைத்திருப்பது தான் திராவிட மாடலா?
இப்படிப்பட்ட மக்களின் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப காலம் வந்துவிட்டது. இது மட்டுமல்லாமல் அதிமுக வெற்றிக்கு தடையாக இருந்த பாரதிய ஜனதா கட்சியையும் கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். ஆகையால் இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிக்கு தடையாக இருந்த அந்தத் தடையும் நீங்கிவிட்டது.
தமிழக அரசின் மீது மக்களுக்கு கடும் கோபம், அதேபோல மத்திய அரசு மீதும் கோபம், இந்த 2 கட்சியின் மீது மக்களும், மாநில அரசு மீது கோபப்படுகின்ற மக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் வாக்களிப்பார்கள் என்பதை மட்டும் இந்தக் கூட்டத்தில் உறுதிபட தெரிவிக்கிறேன்.
முல்லைப் பெரியார், கச்சத்தீவு பிரச்சனை தமிழகத்தினுடைய பிரச்சனைகளுக்கு அதிமுக தான் முன்னோடியாக இருந்து இதுவரை போராடி வெற்றி பெற்று மக்களுக்கு தேவையானதை செய்து வருகிறது,என நத்தம் இரா. விசுவநாதன் பேசினார்.