ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினரால் பெய்தது பணமழையல்ல… பண சுனாமி ; நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan14 March 2023, 9:09 am
ஈரோடு இடைத்தேர்தலில் பண மழை அல்ல, பண சுனாமி என்றும், இதுவரை அரசியல் வரலாற்றில் காணாத காட்சிகளை பார்க்க முடிந்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 750 நபர்களுக்கு வேஷ்டி மற்றும் சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் நத்தம் சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டார்.
அப்போது, ஈரோடு இடைத்தேர்தலில் பணம் மழையல்ல பண சுனாமி எனவும், இதுவரை அரசியல் வரலாற்றில் இப்படிபட்ட இடைத்தேர்தலை சந்தித்ததில்லை எனவும் பேசினார். ஈரோடு இடைத்தேர்தலில் பொதுமக்களை ஒரு பட்டியல் போட்டு அடைப்பது போல அடைத்து சாப்பாடு போட்டு திரைப்படம் காட்டி, அவர்கள் தேவையான பணங்களை அள்ளி வீசியும், பரிசு பொருட்களை அள்ளி கொடுத்தும் திமுகவினர் வாக்குகளை பெற்றதாகவும், இத்தனை பரிசு பொருட்களை திமுகவினர் அள்ளி கொடுத்தும், அதிமுக 43 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது எனவும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு, கொடைக்கானல் நகர செயலாளர் ஸ்ரீதர், ஆயக்குடி பேரூர் செயலாளர் சசிகுமார், பாலசமுத்திரம் சக்திவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.