மத்திய அரசை குற்றம் சொல்லி தப்பிக்க முயற்சி ; இது திமுக எழுச்சி மாநாடு அல்ல.. வீழ்ச்சி மாநாடு ; ஆர்பி உதயகுமார் விமர்சனம்

Author: Babu Lakshmanan
22 January 2024, 12:04 pm

கோடி கோடியாக வாரி இறைத்து நடைபெற்ற திமுக மாநாடு எழுச்சி மாநாடு அல்ல, திமுக வீழ்ச்சி மாநாடு என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது :- திமுக இளைஞரணி மாநாடு கேலி கூத்தாக நடைபெற்று உள்ளது. மாநாட்டில் தலைவர்கள் பேசும்பொழுது, தொண்டர்கள் தலைகள் அதிகமாக தெரியும், இது உலக சாதனை படைக்கும் என்று அமைச்சர்கள் கூறினார்கள். ஆனால் தலைவர்கள் பேசும்பொழுது மக்கள் அங்கு இல்லை, காலி சேர்கள் தான் காட்சியளித்தது.

அது மட்டுமல்ல மாநாட்டில் கலைநயத்துடன் ஆட்சியில் சாதனை விளக்கி கலை நிகழ்ச்சி நடைபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஆனால், அங்கோ மக்கள் முகம் சுளிக்கும் வகையில் அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம் நடனம் ஆடப்பட்டது.

மாநாட்டில் தீர்மானங்களை உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்பி முயற்சி எடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசை குற்றம் சொல்லி தங்களை தப்பித்துக் கொள்ள தீர்மானத்தை போட்டுள்ளனர். மக்களை ஏமாற்றுவதற்கு தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் போட்ட தீர்மானத்தில் இதுவரை நிறைவேற்ற எந்த முயற்சி எடுக்கவில்லை என மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள்.  ஆனால், ஒரே கையெழுத்திற்கு இப்போது ஒரு கோடி கையெழுத்து தேவை என்று கூறுகிறார்கள். திமுக ஆட்சியின் தோல்வியை மறைக்க தான் இது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள். இந்த தீர்மானங்களின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் இனத்திற்கும் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.

கோடி கோடியாக பணத்தைக் கொட்டி, அதிகாரத்தை பயன்படுத்தி, இளவரசருக்கு முடி சுட்டும் விழா அரைகுறை விழாவாக தான் இருந்தது. இந்த மாநாட்டில் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன், எழுச்சியுடன் இருப்பார்கள் என்று நினைத்ததில் தோல்வி அடைந்து விட்டனர். உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டு தலைவராக உருவாக நினைத்ததில் தோல்வி அடைந்து விட்டனர்.

திமுக எழுச்சி மாநாடு தற்போது வீழ்ச்சி மாநாடாக மாறிவிட்டது. ஏனென்றால், அங்கு காலி சேர்கள் தான் காட்சி பொருளாக இருந்தது. திமுக ஆட்சியில் தான் தமிழக உரிமைகள் காவு கொடுக்கப்பட்டது. கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டது, காவேரி காவு கொடுக்கப்பட்டது, கேரளா முல்லைப் பெரியாரில் அணைகட்ட முயற்சித்தபோது வாய் மூடி மௌனியாக இருந்தது தான் திமுக.

முல்லைப் பெரியாரில் 142 அடியாக தண்ணீரை தேக்கலாம் என்ற உரிமையை பெற்று தந்தது அம்மாவின் அரசு. அதேபோல் காவேரி பிரச்சனைக்கு 50 ஆண்டு காலத்திற்கு பிறகு தீர்வை பெற்றுத் தந்தவர் எடப்பாடியார்.
அதேபோல் கல்வியில் மத்திய அரசா, மாநில அரசா என்ற எந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற விவாதத்தில் இரண்டும் சேர்ந்து கொள்ளலாம் என்று திமுக ஆட்சியில்தான் கூறப்பட்டது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் போகாத ஊருக்கு இன்னமும் திமுக வழி சொல்வது போல மாநாட்டில் தீர்மானம் உள்ளது. இது முட்டாள்தனமான நிலைப்பாடு. இன்றைக்கு இந்த ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரிஉயர்வு, பால் விலை உயர்வு,பத்திர பதிவுத்துறை கட்டணம் உயர்வு உள்ளது. மேலும், தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து தமிழகம் வீழ்ந்து கொண்டு தலைகுனிந்து வருகிறது.

தமிழகத்தை மீண்டும் தலைநிமர செய்ய எடப்பாடியாரல் தான் முடியும். மீண்டும் அவர் தலைமையில் பொற்கால ஆட்சி அமையும். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார், என கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 347

    0

    0