‘புலிவேட்டைக்கு போகும் போது எலிவேட்டையை பற்றி பேசாதீர்கள்’… ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜு கிண்டல்…!!
Author: Babu Lakshmanan11 January 2024, 7:39 pm
புலிவேட்டைக்கு போகும் போது எலிவேட்டை பற்றி பேசாதீர்கள் என ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டலாக கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ மீது அவதுாறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்நிலையில். முன்னாள் செல்லுார் ராஜூ இன்று ஆஜராக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 21 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது :- நான் ஆர்ப்பாட்டத்தில் உண்மையை தான் கூறினேன். ஆனால் என்மீது வழக்கு போட்டுள்ளார்கள். நான் பொதுவாழ்வுக்கு வரும் போது திமுக தொடர்ந்த கொலை வழக்கிலேயே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு. அந்த வழக்கில் குற்றமற்றவன் என நிருபித்து விடுதலையானவன் நான்.
அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்குகள் எல்லாம் எனக்கு ஜீஜீபி. பொதுவாழ்க்கைக்கு வந்தபின்பு வழக்குகளை கண்டெல்லாம் அதிமுககாரர்கள் பயப்பட மாட்டார்கள்
தமிழக மக்கள் நாள்தோறும் நான் ஆர்ப்பாட்டத்தில் பேசியதை தான் பேசிக்கொண்டுள்ளனர். ஆனால் நான் மேடையில் பேசியதால் அவதூறு வழக்கு போடுகிறார்கள். குறைகளை களைவதை விட்டோவிட்டு பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை தான் திமுக செய்கிறது, எனக் கூறினார்.
ஒபிஎஸ் அதிமுக சின்னம் கொடி ஆகாயவற்றை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது குறித்த கேள்விக்கு,
“நாங்கள் புலிவேட்டைக்கு செல்கிறோம். எலிவேட்டையை பற்றி பேசாதீர்கள்,” என கூறினார்.