EPS வளர்ச்சியை பொறுக்க முடியாத திமுக அரசு… விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் : அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜு!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 3:35 pm

11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியுடன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் விதிமீறல் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த அரசு அனுமதி அளித்த விவகாரம் குறித்த கேள்விக்கு, “ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வருவோம் என திமுக அல்வா கொடுத்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக திமுக எதையும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக அரசு இப்படி செய்கிறது. காழ்ப்புணர்ச்சியுடன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்குப் பின்பே முழு உண்மை தெரியவரும்,” என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளை மட்டுமே கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாநாடு குறித்த கேள்விக்கு, “ஓ.பன்னீர்செல்வம் தனது இருப்பை காண்பிப்பதற்காக இப்படி கடை விரித்துக் கொண்டிருக்கிறார்,” என தெரிவித்தார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?