விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி சிறப்பாக செயல்படுவார் ; செல்லூர் ராஜூ நம்பிக்கை !

Author: Babu Lakshmanan
3 January 2023, 11:47 am

விளையாட்டுத்துறை அமைச்சராக இளைஞரான உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என்று செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபாடிப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்வதற்காக இந்திய விளையாட்டு வீரர்களை அமைச்சூர் கபாடிக் குழு சார்பாக தேர்வு செய்யும் கபாடிப் போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;- மதுரையில் இந்த கபாடிப் போட்டி நடைபெறுவது பெரும் மகிழ்ச்சி. அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் 252 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பிப்ரவரி மாதம் 23ம் தேதி ஈரானில் நடைபெறும் உலக கபாடிப் போட்டியில் விளையாட உள்ளார்.

இந்தியா சார்பில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, 12 நபர்கள் விளையாட செல்வார்கள். இதில் தமிழர் ஒருவரும் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெறும் இந்த தேர்வு போட்டிக்கி தமிழக நிதி அமைச்சர் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அது பாராட்டுக்குரியது. அமைச்சூர் கபாடிக் குழுவிற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு அரசும் விளையாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அம்மாவின் அரசும், எடப்பாடியார் அரசும் பல்வேறு நிதிகளை விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல் இட ஒதுக்கீடுகளையும் கூடுதலாக வழங்கினர். தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசு விளையாட்டுத்துறைக்கு இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இது பாராட்டுக்குரியது.

இதனால் விளையாட்டுத் துறைக்கு நிறைய செய்வார்கள். கூடுதலாக விளையாட்டு ஸ்டேடியங்கள் இருக்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். செய்தியின் வாயிலாக விளையாட்டுத் துறை அமைச்சர் கவனத்திற்கு நீங்கள் கொண்டு செல்லுங்கள்,” என செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ