தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார்தான் முதல்வர்… அடித்துச் சொல்லும் முன்னாள் அமைச்சர்…!!!
Author: Babu Lakshmanan5 October 2023, 10:11 am
தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார்தான் முதல்வர் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றதேர்தல், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, பூத் கமிட்டி அமைக்கும் பணியை ஆய்வு செய்யும் கூட்டம் தூத்துக்குடி தெற்கு பகுதி முத்தையாபுரத்தில் வார்டு வாரியாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி தெற்கு பகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி தொகுதி மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில், அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை ஆய்வு செய்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது :- வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றெடுக்க வேண்டும். மேலும், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் அதிகமான தொகுதிகளை வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வர அனைவரும் பாடுபட வேண்டும். எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கடுமையாக உழைக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட துணை செயலாளர் சந்தனம், முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா.ஹென்றி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கவுன்சிலர் வக்கீல் மந்திரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டணர்.