சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் அதிமுக வெற்றி பெறும் ; முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நம்பிக்கை!!

Author: Babu Lakshmanan
16 August 2023, 9:14 am

பொள்ளாச்சி: காவல்துறை திமுகவின் அடிமையாக செயல்படுகிறது முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி கோவை மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களை வரவேற்கும் விதமாக விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

போலீசார் அனுமதி மறுத்ததால் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து போலீசார் அனுமதி அளித்தனர்.

இந்நிலையில், மாநாடு குறித்த விளம்பர ஸ்டிக்கர் ஒட்டிய ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ தாமோதரன் கலந்து கொண்டு பலூனை வானில் பறக்க விட்டனர்.

பின்னர், எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, திமுகவினர் அமைச்சர்கள் வருகை, கட்சி நிகழ்வுகளுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் போலீசார் கண்டு கொள்வதில்லை. கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை. ஆனால், அதிமுக சார்பில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு விளம்பரங்கள் செய்தால், போலீசார் அனுமதி தராமல் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். காவல்துறையினர் திமுகவின் அடிமையாக மாறிவிட்டது.

தமிழகத்தில் எப்போது தேர்தல் வரும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். சட்டமன்றத்திற்கு எப்போது தேர்தல் வந்தாலும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார், என தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ