ஓசி டிக்கெட் விவகாரம்… அதிமுகவினர் மீதே பொய் வழக்கா? அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கொந்தளித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 10:49 am
SP Velumani - Updatenews360
Quick Share

அரசு பேருந்தில் நடந்துனரிடம் ஓசி பஸ் டிக்கெட் வேண்டாம் என மூதாட்டியை நாடகமாட செய்து வீடியோ எடுத்ததாக அதிமுக தொண்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

அதில், “உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்.” என்றார்.

இதனிடையே கடந்த சில நாட்கள் முன்பாக கோவை அரசு பேருந்து ஒன்றில் நடத்துனரிடம் மூதாட்டி ஒருவர் கட்டணம் கொடுத்து டிக்கெட் கேட்டார். அதற்கு நடத்துனரோ , இது இலவச பேருந்துதான் கட்டணம் வேண்டாம் என்று கூற, “தமிழ்நாடே ஓசியில போகட்டும், நான் ஓசியில் போக மாட்டேன். எனக்கு கட்டணம் பெற்று டிக்கெட் கொடுங்கள் என்று கூறியது பரபரப்பை கிளப்பியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்ட நிலையில், திமுக செய்தித்தொடர்பாளர் ராஜீவ் காந்தி “கோவை அதிமுக IT WING -ஐ சார்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சனை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்!” என்று பதிவிட்டார்

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வீடியோவை வெளியிட்டது அதிமுகவை சேர்ந்த பிருத்விராஜ்தான் என்பது உறுதியானது. இதனை அடுத்து மதுக்கரை போலீசார் பிருத்விராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது அவதூறு பதிவு செய்தது. இதற்கு அதிமுகவின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை தரக்குறைவாகவும், இழிவாக நடத்தும் வகையிலும், நாகரிகமற்ற முறையிலும் பேசிய மாண்புமிகு அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கழகத் தொண்டர், திரு. பிரித்விராஜ் மீது கோவை மாவட்டம் மதுக்கரை காவல்நிலையத்தில் பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இல்லையெனில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர், அண்ணன் எடப்பாடியார் அவர்களிடம் அனுமதி பெற்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், மேற்கு மண்டல காவல்துறை IG அலுவலகம் முன்பும் ஜனநாயக ரீதியாக மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 406

    0

    0