நீட் விவகாரம்.. ஓயாமல் முட்டுக் கொடுக்கும் திமுக… மறுக்க முடியுமா..? அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த எஸ்பி வேலுமணி..!!

Author: Babu Lakshmanan
15 August 2023, 6:38 pm
Quick Share

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த 2010 -ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக-வும் சேர்ந்து தான் நீட் தேர்வை நடைமுறைக்கு கொண்டு வந்தனர் என்பதை யாராலும் மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை! மத்திய காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய சுகாதார துறை இணை அமைச்சராக இருந்த திமுகவின் திரு. காந்திசெல்வன் அவர்கள் தான் நீட் தேர்வு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் என்பதை தற்போதைய திமுக அரசால் மறுக்க முடியுமா?

நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் நீட் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்து நீட் தேர்விற்கு அனுமதி பெற்றது காங்கிரஸ் அரசு! அப்போது காங்கிரஸ் அரசுக்கு முட்டுக் கொடுத்தது திமுக! இதை திமுகவால் மறுக்க முடியுமா?

அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தலைமையிலான கழகத்தின் ஆட்சியில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பட்டதையும், நீட் தேர்வினால் ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவாகிப் போகும் சூழல் ஏற்பட்ட பின், அம்மாவின் ஆசிபெற்ற மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்பட்டதையும் திமுகவால் மறுக்க முடியுமா?

நீட் தேர்வை ஒழிப்பதற்கான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என, இல்லாததையும் பொல்லாததையும் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இதுநாள் வரை நீட் தேர்வை ரத்து செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டே வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறிய திமுகவை நம்பி வாக்களித்த மக்கள், அதை ரத்து செய்யாததால் மாணவச் செல்வங்களும், அவர்களின் பெற்றோர்களும் மிகுந்த ஏமாற்றமடைந்ததற்கு திமுக அரசு தானே காரணம்! இதை திமுகவால் மறுக்க முடியுமா?

நீட் தேர்வு மசோதாவை முதன் முதலாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த திமுக எம்.பி. காந்திசெல்வன் அவர்களும், நீட் தேர்வை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுத்ததும் திமுக! இதை மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் பலமுறை சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.

இவ்வாறு நீட் தேர்வை கொண்டு வந்த திமுக, அதை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறி ஆட்சிக்கு வந்த பின் “இரட்டை வேடம்” போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. “நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது!”

இவ்வாறு இரட்டை வேடம் போடும் திமுக‘விற்கு தமிழக மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்! அண்ணன் #எடப்பாடியார் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் கழகத்தின் ஆட்சி அமையும்!, என தெரிவித்துள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 201

    0

    0