கோவை தொகுதிக்கு குறி வைத்த மாஜி அமைச்சர்… ஜெயலலிதாவிடம் விருது வாங்கிய அதிமுக பிரமுகருக்கு ஆதரவு!!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2023, 11:54 am
கோவை தொகுதிக்கு குறி வைத்த மாஜி அமைச்சர்… ஜெயலலிதாவிடம் விருது வாங்கிய அதிமுக பிரமுகருக்கு ஆதரவு!!
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியும் அரசியலில் மீண்டும் ஒரு ரவுண்டு வரும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சூலூர் அருகே உள்ள செங்கத்துறை கிராமத்தை பூர்விகமாக கொண்ட செ.ம.வேலுச்சாமி ஒன்றியச் செயலாளராக தொடங்கி அதிமுகவில் படிபடியாக உயர்ந்து மாவட்டச் செயலாளர், அமைச்சர், மேயர் என பல பதவிகளை அடைந்தவர்.
கோவை மேயராக இருந்த போது சிறந்த மாநகராட்சி நிர்வாகத்துக்காக ஜெயலலிதாவிடம் விருது கூட வாங்கினார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 2001 -2006 கால கட்ட அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் உச்சபட்ச அதிகாரம் பெற்றவராக வலம் வந்தார்.
பிறகு உட்கட்சி அரசியல் மோதலில் சிக்கி பதவிகள் ஒவ்வொன்றாக இழந்தார். இப்போதும் அறிக்கைகள் விடுவது, கட்சியினர் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்பது என ஆக்டிவ் அரசியலில் தான் இருந்து வருகிறார்.
இந்நிலையில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதியில் செ.ம.வேலுச்சாமி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அப்போது வெகுவாக ஆர்வம் காட்டவில்லை. அரசியலுக்கு இணையாக ஆன்மிகத்திலும் இப்போது அதிகம் நாட்டம் காட்டி வருகிறார் செ.ம.வேலுச்சாமி.