விஐபி சலுகை வேண்டாம்… மக்களோடு மக்களாக மாமல்லபுரத்தை பார்வையிட்ட குடியரசு முன்னாள் தலைவர் : செல்ஃபி எடுத்த மக்கள்..!!!
Author: Babu Lakshmanan3 January 2023, 6:47 pm
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களோடு மக்களாக பார்வையிட்டார்.
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். முன்னதாக, கடற்கரை கோயில் பகுதிக்கு வந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரை தமிழக அரசு சார்பில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.
பிறகு அவர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோயிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டு ரசித்தார். கடற்கரை கோயிலின் இரு கருவரைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டார்.
அப்போது, உடன் வந்த மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி ஒருவர், கடற்கரை கோயில் உருவாக்கப்பட்டதன் பின்னணி, கடல் ஓரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோயில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக இந்தி மொழியில் விளக்கி கூறினார்.
அவரிடம் ராம்நாத் கோவிந்த் கடற்கரை கோயிலின் அரிய தகவல்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். இறுதியில் கடற்கரை கோயிலின் அனைத்து சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அப்போது சுற்றுலா வந்திருந்த மத்திய பிரதேச மாநில பயணிகள் சிலர், அவரது அருகில் செல்பி எடுக்க ஆர்வமாக சென்றனர். அவர்களின் விருப்பத்தை அறிந்த குடியரசு முன்னாள் தலைவர் அவர்களை தன் அருகில் அழைத்து செல்பி, புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சிபடுத்தினார்.
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.