அடுத்த அமைச்சரவை கூட்டம் திகார் ஜெயிலில் தான்… முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan20 July 2023, 2:42 pm
தமிழக அரசின் அடுத்த அமைச்சரவை கூட்டம் திகார் ஜெயிலில் நடக்கக் கூடிய நிலை ஏற்படும் என்று திருப்பூரில் விலைவாசி உயர்வுக்கு எதிரான அதிமுக ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டபேரவை துனை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டிக்கும் வகையில், திருப்பூர் குமரன் நினைவகம் அருகே ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில். கட்சியினர் காய்கறி விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில், காய்கறி மாலை அணிந்தபடியே அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக பேசிய சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த திமுக ஆட்சி கரண்ட் கட் பிரச்சினையால் கவிழ்ந்ததாகவும், இப்போதைய திமுக ஆட்சி கரண்ட் பில் விவகாரத்தில் கவிழும் எனவும் பேசினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை, அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை, இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் அடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம் என தெரிவித்த அவர், திமுகவின் அடுத்த அமைச்சரவை கூட்டம் மத்திய அரசின் திகார் ஜெயிலில் கூட நடக்க வாய்ப்பிருப்பதாக பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் எஸ் எம் ஆனந்தன் , உடுமலை ராதாகிருஷ்ணன் , விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.