பிடிப்பட்ட சிறுத்தை வேறு கூண்டில் மாற்றும் போது தப்பியோடிய பரபரப்பு வீடியோ : வனத்துறை அசால்ட்… தெறித்து ஓடிய மக்கள்!!!
Author: Udayachandran RadhaKrishnan30 June 2022, 4:26 pm
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் கூண்டிற்குள் சிக்கிய சிறுத்தை தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஓசூர் அருகே செயல்படாத கல்குவாரி உள்ளது. இங்கு பதுங்கி இருந்த சிறுத்தை கடந்த சில நாட்களாக அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாயிகள் வளர்த்துவரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது.
தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தாளவாடி வனத்துறையினர் கல்குவாரியை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூண்டுகள் வைத்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதனையடுத்து பிடிபட்ட சிறுத்தையை பவானிசாகர் வனச்கரத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காக கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
சிறுத்தை சிக்கியிருந்த கூண்டு மிகவும் சேதமடைந்திருந்ததால் மற்றொரு புதிய கூண்டிற்குள் மாற்றும் போது எதிர்பாராத விதமாக தீடீரென எழுந்த சிறுத்தை காட்டிற்குள் தப்பி ஓடியது.
இதைக் கண்ட சுற்றிலும் நின்றிருந்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் நான்கு புறமும் தெறித்து ஓடினர். சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு உள்ளதால் வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை மயக்கம் அடைய வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுத்தை தாக்கி விடும் என்பதால் ஒசூர் கிராம கல்குவாரி பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மேலும் இதே சேதமடைந்த கூண்டில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிக்கிய சிறுத்தை தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.