மான நஷ்டஈடு வழக்கில் பரபரப்பு திருப்பம்.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan10 November 2023, 9:59 pm
மான நஷ்டஈடு வழக்கில் பரபரப்பு திருப்பம்.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டசபை தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில் தான் சி.விஜயபாஸ்கர் மீது கேரளாவை சேர்ந்த ஷர்மிளா என்பவர் மோசடி புகாரை முன்வைத்ததோடு, அவரை சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.
இதுதொடர்பாக ஷர்மிளா தன்னிடம் ரூ.14 கோடி ரூபாயை சி விஜயபாஸ்கர் பெற்று கொண்டார். அதன்பிறகு ரூ.3 கோடியை மட்டும் திரும்ப அளித்தார். மீதமுள்ள பணத்தை கேட்டபோது அவர் தரவில்லை. மாறாக பணத்தை தராமல் மிரட்டல் விடுத்தார் என ஷர்மிளா புகார் தெரிவித்தார்.
மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விஜயபாஸ்கருக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து ஷர்மிளாவுக்கு எதிராக சி விஜயபாஸ்கர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்பட்டது.
தன்னை பற்றி அவதூறான கருத்துகளை ஷர்மிளா கூறி வருகிறார். இதனால் அவரிடம் இருந்து மானநஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் தான் இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சதீஸ்குமார் தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பில், அமைச்சராக இருந்த சி விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணி செய்தவர்.
விஜயபாஸ்கர் மீது இதுபோன்ற தவறான அவதூறுகளை கூறக்கூடாது. அதோடு அனைத்து சமூக வலைதளங்களில் சி விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை ஷர்மிளா நீக்க வேண்டும். மேலும் சி விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியதற்கான மானநஷ்ட ஈடாக ரூ.1 கோடியை அவர் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.