தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு மட்டும் விதி விலக்கா? இதுக்குத்தான் மேம்பால தூண்களில் ஓவியங்களா? விதியை மீறிய மாநகராட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 9:05 am

கோவையில் உள்ள அரசு கட்டிடங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சுற்றுச்சுவர்களில் மாநகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதியின்றி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இது குறித்து கோவை மாநகராட்சி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாநகராட்சி மற்றும் அரசு அனுமதியின்றி அரசு கட்டிடங்கள், மேம்பால தூண்களில் போஸ்டர்கள் ஒட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் போஸ்டர் ஒட்டும் பணியாளர்கள், தனியார் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் மேம்பால தூண்களிலும் பொது சுவர்களிலும் போஸ்டர்களை ஒட்டி அழகான கோவையை அசுத்தப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே கோவையில் திருச்சி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் தூண்களில் தேச தலைவர்கள் படம் ஒட்டப்பட்டதால் அங்கு போஸ்டர் ஒட்டப்படுவது முற்றிலுமாக ஒழிந்தது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காந்திபுரம் மேம்பாலத்தின் தூண்களில் சோதனை முறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஓவியங்கள் வரையப்பட்டன.

இதனிடையே காந்திபுரம் மேம்பாலத்தின் தூண்களில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி ஆகிய ஐம்பெரும் காப்பியங்களின் கதைகளை விவரிக்கும் வகையில் தனியார் நிறுவனமும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து ஓவியங்கள் வரைந்தன.


ஒருவழியாக போஸ்டர் பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று மாநகராட்சி நிர்வாகத்தை மக்கள் பாராட்டிய நிலையில் தூண்களில் வரையப்பட்ட ஒவ்வொரு ஓவியங்களின் மேற்பகுதியிலும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரம் வரையப்பட்டுள்ளது.

ஏற்கனவே சாலைகளில் விளம்பர பதாகைகள் வைப்பதும், சாலை தடுப்புகளில் விளம்பரங்கள் வைக்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகமே இத்தகைய தனியார் விளம்பரத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

மாநகரில் உள்ள மேம்பால தூண்களில் பிரதிபலன் பாராது ஓவியங்கள் வரைய பல கலைஞர்கள் இருந்த போதிலும், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காகவே மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 426

    0

    0