கெட்டுப்போன கேக் விற்றதாகப் புகார்… உடனே ஆக்ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ; உரிமத்தை ரத்து செய்து அதிரடி!

Author: Babu Lakshmanan
28 September 2023, 9:00 am

கெட்டுப்போன கேக் விற்றதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், பேக்கரியின் உணவு பாதுகாப்புத் துறை உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூத்துக்குடி அருகே பொட்டல்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவர் செப்டம்பர் 26ஆம் தேதியன்று தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார், அதில் தனக்கு குழந்தை பிறந்த காரணத்தினால் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்குவதற்காக முள்ளக்காடு பகுதியில் இயங்கி வரும் பேக்கரியில் 30 கேக் 450 ரூபாய் பணம் செலுத்தி வாங்கினேன். அதனை வீட்டுக்கு சென்று நண்பர்களுக்கு கொடுக்கும் பொழுது கேக் கெட்டுப் போயிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து கடைக்கு நேரில் சென்று கேக் கெட்டு போயிருப்பதை கூறும் பொழுது அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. மேலும், எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என கூறியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன வேதனையால், இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட பேக்கரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,என புகார் அளித்தார்.

இத்தகவலை தொடர்ந்து ஆதிராஸ் பேக்கரிக்கு தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டார். அவ்விசாரணையின் போது, பேக்கரியில் ஞாயிறு அன்று தயாரிக்கப்பட்ட கேக்குகள் உரிய வெப்பநிலையில் பராமரிக்கப்படாமல், நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டதும், அந்த கேக்குகளில் பூஞ்சைத் தொற்று இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. மேலும், நடந்த தவறுகளுக்கு உரிமையாளர் பொறுப்பேற்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், அவ்வளாகத்தில் சில பொது சுகாதாரக் குறைபாடுகளும் காணப்பட்டன. எனவே, தொடர் விசாரணைக்காகவும், பொது சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஏதுவாகவும், மேற்கூறிய பேக்கரியின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்யப்படுவதாக, உரிமையாளரிடம் தெரிவித்து, வணிகத்தினை உடனே நிறுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு இன்று நியமன அலுவலர் அலுவலகத்தில் பேக்கரி உரிமையாளருக்கு சார்பு செய்யப்படும்.

மேலும், தப்புக்குறியீடான 5 லிட்டர் நெய்யும், உரிய வெப்பநிலையில் இல்லாத 9 கிலோ கேக்குகளும், 2.5 லிட்டர் மில்க் ஷேக்குகளும் பேக்கரியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, நெய் தவிர மற்றவை அழிக்கப்பட்டது. நெய்யை உணவு பகுப்பாய்வு செய்வதற்காக, பகுப்பாய்வுக்கூடத்திற்கு விரைவில் அனுப்பப்படும் என உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும், நுகர்வோர்கள், கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதிக் காலம் அறிந்து வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். சுகாதாரமற்ற உணவுப் பொருட்களின் விற்பனை குறித்து நுகர்வோர்களுக்குத் தெரியவந்தால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது கால் யுவர் கலெக்டரின் 86808 00900 என்ற புகார் எண்ணிற்கோ அல்லது TN Food Safety App-ற்கோ புகார் அளிக்கலாம். தங்களது விபரம் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 362

    0

    0