டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வெடித்த நாட்டுவெடிகுண்டு…அடுத்தடுத்து 6 வெடிகுண்டுகள் பறிமுதல்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரபரப்பு..!!
Author: Rajesh24 January 2022, 11:35 am
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டிராக்டர் ஏறி நாட்டு வெடிகுண்டு வெடித்த நிலையில் அதே இடத்தில் அடுத்தடுத்து 6 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த தெற்கு கோட்டையூர் அரசு பள்ளி பின்புறம் உள்ள தரிசு நிலத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் டிராக்டர் ஓட்டிசென்றுள்ளார். அப்போது டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிய நாட்டு வெடிகுண்டு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
நல்வாய்ப்பாக பாலசுப்பிரமணியன் உட்பட யாரும் எந்தவித காயமும் இன்றி தப்பினர். தகவலறிந்து சென்ற மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையிலான போலீசார் இந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதேஇடத்தில் அடுத்தடுத்து 6 நாட்டுவெடிகுண்டுகள் சிக்கின.
தொடர்ந்து அந்த இடத்தில் போலீசார் முகாமிட்டு தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுப்பட்டி வனசரகத்தை ஒட்டியுள்ள பகுதியில் 9 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன.
தற்போது தரிசு நிலத்தில் மேலும் சில நாட்டு வெடிகுண்டுகள் அதேபகுதியில் கிடைத்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.