ரெண்டாக பிரிந்த சேரன் எக்பிரஸ்.. ரயிலின் பெட்டிகள் இணைப்பு துண்டிப்பு: ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு..!

Author: Vignesh
6 November 2022, 10:14 am

திருவள்ளூர் அருகே சென்னை-கோவை சேரன் விரைவு ரயில் இரண்டு பெட்டிகள் இணைப்பு துண்டிப்பு ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் ரயில் பயணங்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் விரைவு ரயிலின் இரு பெட்டிகளின் இணைப்பு திருவள்ளூர் அருகே துண்டாகியதில் நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். ஓட்டுநரின் சாமர்த்தியதால் ரயிலை நடைமேடையில் நிறுத்தியதால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் இருந்து 12673 என்ற எண் கொண்ட சேரன் விரைவு ரயில் புறப்பட்டு திருவள்ளூர் அருகே நேற்று இரவு 11 மணிக்கு ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது இதில் S.7 மற்றும் S.8 ஆகிய 2 பெட்டிகளிடையே பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரயிலில் பயணித்த ரயில் பயணிகள் பயத்தில் அலறியுள்ளனர். மேலும் பயணிகள் அனைவரும் கூச்சலிடத் தொடங்கினர். திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் ரயில் சென்ற போது திடீரென்று இரண்டு பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கி உடைந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது.

இதனை உணர்ந்த விரைவு ரயிலின் ஓட்டுநர் மிக சாமர்த்தியமாக ரயிலை வேகத்தை குறைத்து எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் ரயிலை நிறுத்தியுள்ளார். எனினும் பலத்த சத்தம் கேட்டதால் பயணிகள் அச்சமடைந்து கூச்சலிடத் தொடங்கினர்.
வழக்கமாக அதிவேகமாக செல்லும் விரைவு ரயில், நிலையத்தின் அருகே குறைந்த வேகத்தில் சென்றதாலும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் பெருத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், ரயில் பெட்டிகளின் இணைப்பு உடைந்த இடத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ரயில் பயணிகள் திருவள்ளூர் ரயில்நிலையத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், சென்னை பெரம்பூர் கேரேஜில் இருந்த இணைப்பு கொக்கிகள் புதியதாக வரவழைக்கப்பட்டது.

பின்னர் சென்னை-கோவை சேரன் விரைவு ரயிலின் இருபெட்டிகளிலும் பொருத்தப்பட்டு, விரைவு ரயிலுடன் இணைக்கப்பட்டு 3 மணி நேரத்திற்கு பின்னர் அரக்கோணம் மார்க்கமாக கோவைக்கு புறப்பட்டு சென்றது. சம்பவத்தால் ரயில் பயணிகளிடையே பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 404

    0

    0