‘படித்தது 8ம் வகுப்பு.. பார்த்தது டாக்டர் வேலை’ ; 15 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது!!
Author: Babu Lakshmanan7 April 2023, 11:32 am
தருமபுரி ; பென்னாகரத்தில் 15 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த பலே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் ராஜன் கிளினிக் என்ற பெயரில் வீட்டிலேயே கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். எட்டாம் வகுப்பு படித்துவிட்டு, இங்கிலீஷ் மருத்துவம் பார்த்ததாக மருத்துவ இணை இயக்குனர் சாந்தி அவர்களுக்கு புகார் மனு வந்துள்ளது.
இதன் அடிப்படையில் நேற்று மாலை மருத்துவ குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 50 பாட்டில் குளுக்கோஸ் மற்றும் இங்கிலீஷ் மருந்துகள் மாத்திரைகள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து பென்னாகரம் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்து பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலி டாக்டரை தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.