தமிழகத்தில் தொடரும் இரிடியம் மோசடி சம்பவம்… போலி இரிடியத்தை கடத்திச் சென்ற கும்பலை மடக்கி பிடித்த போலீசார்…!!
Author: Babu Lakshmanan22 April 2022, 10:57 am
திண்டுக்கல் : பழனி அருகே போலி இரிடியத்தை கடத்தி சென்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி வழியாக காரில் போலி இரிடியம் கடத்தி செல்வதாக போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு மற்றும் பழனி தாலுகா போலீஸார் இணைந்து பழனி அருகே வண்டிவாய்க்கால் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உடுமலையில் இருந்து பழனி நோக்கி வந்த காரை மறித்து, அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது காரில் இருந்த 6 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்ததில், இரிடியம் போன்ற உலோகம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார், 6 பேரையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சையது இப்ராகீம் (27), செல்வகுமார் (31), சுந்தரராஜ் (26), விக்னேஷ் (32), அபுதாகீர் (30) மற்றும் குமரலிங்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (52) ஆகிய 6 பேரும் இரிடியம் விற்பனை செய்து வருவதும், தற்போது போலி இரிடியம் ஒன்றை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
தற்போது , விற்பனைக்காக உடுமலையில் இருந்து போலி இரிடியத்தை காரில் கடத்தி சென்ற போது கையும் களவுமாக சிக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த போலி இரிடியம் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதற்கு முன்பு இவர்கள் இதுபோல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0