தூத்துக்குடியில் 20 ஏக்கர் நிலம்.. விருதுநகரில் 11 வீடுகள்.. முள் படுக்கை சாமியார் சிக்கியது எப்படி?
Author: Hariharasudhan13 January 2025, 6:43 pm
தூத்துக்குடியில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ஏமாற்றிய போலி சாமியாரையும், அவரது மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ் (42). இவர் சாமி அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரிடம் பால சுப்பிரமணியன் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது, தான் அருள்வாக்கு கூறுவதாகவும், புங்கவர் நத்தத்தில் உள்ள கோயிலில் விஷேச பூஜை செய்து பணத்தை இருமடங்காக கொடுத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இதனை நம்பிய லிங்கராஜ், பால சுப்பிரமணியனிடம் சிறப்பு பூஜை செய்வதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2024 வரை பல்வேறு தவணைகளாக 38 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதேபோல், லிங்கராஜின் நண்பர் ஆனந்தகுமார் என்பவரும் ரூ.29 லட்சத்தை பால சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார். பின்னர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தாரை லிங்கராஜ் செல்போனில் தொடர்பு கொண்டபோது, மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு அனைவரும் தலைமறைவாகியது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, அவரது ஊருக்கு லிங்கராஜ் சென்றுள்ளார். அப்போதுதான், பால சுப்பிரமணியன் பலரிடம் ஏமாற்றி பணம் சுருட்டியது தெரியவந்திருக்கிறது. இதற்கு, பால சுப்பிரமணியனின் மகன் ஐயாத்துரை மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்பதும், உள்ளூரில் 19 ஏக்கர் நிலம் மற்றும் 30 லட்சம் மதிப்பில் வீடு உள்ளதாகவும் கூறப்படுகிறது.அது மட்டுமல்லாமல், ஏற்கனவே இரண்டு திருமணம் முடித்துள்ள பால சுப்பிரமணியன், விருதுநகரில் உள்ள ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித் வெற்றிக்கு.. ‘பிறகு நான் காரி துப்புவேன்’.. கடுப்பான அண்ணாமலை!
மேலும், அதே பகுதியில் 11 வீடுகளைக் கட்டியுள்ளதும், இந்த வீடுகளை அந்த பெண்ணே பராமரித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலி சாமியாரையும், அவரது மகனையும் ஓசூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தன்னை சாமியார் என நம்ப வைப்பதற்காக முள்படுக்கையில் குதித்து, குறி சொல்வதை வழக்கமாக கொண்டவராக பால சுப்பிரமணியன் இருந்துள்ளார்.