பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா… பிரபல துணிக்கடையில் அதிர்ச்சி…சில்மிஷ வேலையில் ஈடுபட்ட பெண்..?
Author: Babu Lakshmanan26 June 2023, 6:30 pm
திருக்கோவிலூரில் பிரபல துணிக்கடை ஒன்றில் பெண்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் இருப்பதை கண்டு பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதியில் கடந்த ஓராண்டுகளாக இயங்கி வருகிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிரெண்ட்ஸ் துணிக்கடை. இந்த கடைக்கு நேற்று இரவு இரண்டு பெண்கள் ஆடை வாங்குவதற்காக வந்துள்ளனர். அப்போது, இரண்டு பெண்களும் தாங்கள் வாங்கிய ஆடை சரியான அளவில் உள்ளதா..? என ட்ரையல் ரூம் சென்று அணிந்து பார்க்க முற்பட்டுள்ளனர்.
அப்போது ட்ரையல் ரூமில் உள்ள மேல் பகுதியில் ஏசி பாயிண்ட்டில் செல்போன் ஒன்று இருந்ததை கண்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் கூச்சலிட்டதை கண்ட அருகாமையில் இருந்த பெண் ஒருவர் உடனடியாக உள்ளே சென்று ஏசி பாயிண்டில் வைக்கப்பட்டிருந்த செல்போனை வெளியே எடுத்து வந்துள்ளார்.
பின்னர், துணிக்கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு, பிரபலமான ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் துணிக்கடையில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும் செல்போனை எடுத்துச் சென்ற பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த செல்போனில் தற்போது மெமரி கார்டு இல்லை என்பதால், மெமரி கார்டை பெண் எடுத்து விட்டாரா? என திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் பெண்ணை விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கிடைத்த செல்போனை வைத்து உண்மையில் செல்போன் வெளிநபரால் கொண்டு வந்து கடையில் வைக்கப்பட்டதா அல்லது ஊழியர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டு உள்ளார்களா என திருக்கோவிலூர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.