வறுமையின் பிடியில் குடும்பம்..₹1 லட்சத்திற்கு பெண் குழந்தையை விற்ற தம்பதி.. கோவையில் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan27 August 2024, 12:49 pm
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னகண்ணான் புத்தூரைச் சேர்ந்தவர் ஆதிகணேஷ் (25) . இவர் அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி நந்தினி (22) . இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையிலே, நந்தினி மீண்டும் கர்ப்பமானார்.
அவருக்கு கடந்த 14 ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைத்து பெண் குழந்தை பிறந்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை ஆதிகணேஷ் – நந்தினி தம்பதியினர் விற்க முடிவு செய்தனர்.
இதற்காக அவர் இடைத்தரகர்களை தேடியதாக கூறப்படுகின்றன.
இந்த நிலையிலே, இந்த தம்பதியினர் குழந்தையை விற்பனை செய்ய நினைத்து இருப்பதை அறிந்த கஸ்தூரி பாளையம், சத்யா நகரை சேர்ந்த தேவிகா (42 ) என்பவர் நந்தினியை அணுகியதாக கூறப்படுகின்றன.
அவர் நந்தினி இடம் கூடலூர் கவுண்டம்பாளையம் மாந்தோப்பைச் சேர்ந்த மகேஸ்வரன் – அனிதா தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருப்பதால், அவர்கள் உனது குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படுகிறார்கள், எனவே குழந்தையை என்னிடம் கொடு நான் அவர்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று இடைத்தரகர் நிலையில் செயல்பட்ட தேவிகா தெரிவித்ததாக கூறப்படுகின்றன.
இதை அடுத்து நந்தினி, இடைத்தரகர் தேவிகா ஆகியோர் சேர்ந்து அந்த குழந்தையை அனிதாவிடம் ரூபாய் 1 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளனர். அதற்கான கமிஷனையும் நந்தினி மற்றும் அனிதாவிடம் தேவிகா பெற்றிருக்கின்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் துடியலூரிலுள்ள பெரியநாயக்கன் பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தையை விற்ற அதன் தாய் நந்தினி இடைத்தரகராக செயல்பட்ட தேவிகா, அந்த குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அத்துடன் அந்த பெண் குழந்தையையும் மீட்டனர். தொடர்ந்து இதுபோன்ற தேவிகா யாரிடமாவது குழந்தையை வாங்கி விற்பனை செய்து உள்ளாரா ? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.