உதயநிதியை காக்கா பிடித்த பிரபல இயக்குநர் : சிவகங்கை தொகுதிக்கு குறி.. லிஸ்டில் பிரபல பத்திரிகையாளர்.. திமுகவினர் அப்செட்!
Author: Udayachandran RadhaKrishnan15 February 2024, 1:59 pm
உதயநிதியை காக்கா பிடித்த பிரபல இயக்குநர் : சிவகங்கை தொகுதிக்கு குறி.. லிஸ்டில் பிரபல பத்திரிகையாளர்.. திமுகவினர் அப்செட்!
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணியாற்றி வருகின்றன. குறிப்பாக திமுக தனது தோழமை கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள அதிமுக, மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதற்காக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இன்னொரு பக்கம் பாஜகவோ தங்கள் கூட்டணிக்கு பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அதே சமயம் தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்டும் வருகிறது.
இந்த நிலையில் திமுக கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறது. கடந்த ஜனவரி 29ஆம் தேதி நடந்த திமுக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் கரூர், சிவகங்கை போன்ற தொகுதிகளை கூட்டணிக்கு தாரை வார்க்கக் கூடாது என வலியுறுத்தினர்.
கரூர் தொகுதியை மீண்டும் ஜோதிமணிக்கு தரக்கூடாது என்றும், திமுகவே களமிறங்கி போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதே போல சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் வழங்க கூடாது என காங்கிரஸ் நிர்வாகிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சிவகங்கை தொகுதியில் திமுகவே நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் சிவகங்கை தொகுதியில் போட்டியிட அமைச்சர் ரகுபதி மகன் அண்ணாமலை, சிவகங்கை மாவட்ட துணைச்செயாலளர்கள் உள்ளிட்ட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
அதே போல திமுக செய்தி தொடர்பு மாநில இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியும் இந்த தொகுதி மீது ஒரு கண் வைத்துள்ளார். இன்னும் ஒரு படியாக திமுகவின் ஆதரவாளரும், பிரபல நெறியாளருமான செந்தில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட தனது விருப்பத்தை திமுக மேலிடத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படி சிவகங்கை தொகுதிக்கு போட்டி போடும் திமுக நிர்வாகிகள் மத்தியில், காரைக்குடியை சேர்ந்த திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பனும் கோதாவில் இறங்கியுள்ளார்.
உதயநிதியுடன் உள்ள நெருக்கத்தை வைத்து கரு. பழனியிப்பன் அந்த தொகுதிக்கு குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கருப்பு சிவப்பு கரை வேட்டி கட்டாத திமுககாரர் கரு. பழனியப்பன் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.