நூலிழையில் உயிர்தப்பிய பிரபல இசையமைப்பாளரின் மகன்.. படப்பிடிப்பில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்… பதறிப் போன குடும்பம்..!!
Author: Babu Lakshmanan7 March 2023, 10:23 am
படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏ.ஆர்.அமீன் என்கிற மகன் உள்ளார். இவரும் தந்தையைப் போலவே இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் பாடும் அமீன், அவ்வப்போது தனியாக சொந்தமாக இசை ஆல்பங்களை உருவாக்கி அதில் நடித்தும் வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடலுக்காக நடத்தப்பட்ட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீன் பகிர்ந்துள்ளார்.
அதில், ஆல்பம் பாடலுக்கு நடித்துக் கொண்டிருக்கும் போது, கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செட் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்ததாகவும், சில விநாடிகள் முன்னரோ, பின்னரோ அல்லது சில அங்குலம் முன்னரோ, பின்னரோ இருந்திருந்தால் தங்களது தலையில் விழுந்திருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த விபத்தில் இருந்து கடவுளின் அருளால் உயிர் தப்பியதாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மகன் அமீன் தெரிவித்துள்ளார்.
தானும், தனது குழுவினருமும் அந்த விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை என்றும் அமீன் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.அமீனின் இந்த பதிவைப் பார்த்து பதறிப்போன ஏ.ஆர்.ரகுமான், இறைவனின் அருளால் நீ தப்பித்து இருக்கிறாய் என கமெண்ட் செய்துள்ளார்.