நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று பிறந்த நாள்… பிரமாண்ட கேக் ; தியேட்டரில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்…!!
Author: Babu Lakshmanan12 December 2023, 8:50 am
தூத்துக்குடி மாவட்டம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி சத்தியம் திரையரங்கில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடல் வரிகள் போல் தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து மந்திரமாக ஒருவர் இருக்கிறார் என்றால், அது நடிகர் ரஜினிகாந்த் தான். அன்று முதல் இன்று வரை தன்னுடைய வித்தியாசமான நடிப்பாலும், இயல்பான முக பாவனைகளாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து கொண்டு இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றால், அதற்கு பின்னால் இருக்கும் அர்ப்பணிப்பும், உழைப்பும் சாதாரணமானது அல்ல.1975ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழ் சினிமா வரலாற்றில் 45 வருடங்களுக்கும் மேலாக தனக்கென்று தனி ஸ்டைல், பேச்சிலும் தனக்கென்று தனி பாணி,காமெடி, வில்லத்தனம் என பன்முகத்தன்மையால் ரசிகர்களை ஈர்த்து வரும் ரஜினி, இன்றும் சூப்பர் ஸ்டாராகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளில், அவரது ரசிகர்கள் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும், ஆலயங்களில் வழிபாடு செய்தும் கொண்டாடி மகிழ்வர்.
அந்த வகையில், இந்தாண்டும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நள்ளிரவு தூத்துக்குடி சத்தியம் திரையரங்கில் தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்கள்.
தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தி அவர்கள் கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.