வயல்களுக்கு வாளியில் தண்ணீர் இரைக்கும் அவலம்… தண்ணீரின்றி வாடும் பயிர்கள்… அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் கோட்டூர் பகுதி விவசாயிகள்..!

Author: Babu Lakshmanan
3 February 2024, 4:56 pm

காய்ந்து கருகிவரும் சம்பாபயிர்க்கு நாள் ஒன்றுக்கு விவசாயிகள் கூலிக்கு தொழிலாளிகளை வைத்துகொண்டு 20 குடம், 30 குடம் என்ற அளவில் 3 அல்லது 4 நாட்கள் இடைவெளியில் தண்ணீரை வயல்களில் தெளித்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதியான திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை சார்ந்துள்ள மாவட்டம். மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து குறுவை சாகுபடி பணிகளும், வடகிழக்கு பருவமழையினை நம்பி சம்பா சாகுபடி பணிகளும் இம்மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 6,000 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்கொண்டனர். நடப்பு வடகிழக்கு பருவ மழை காலத்தில் சராசரி அளவை காட்டிலும் மிக குறைவாக மழை பெய்ததால் இம்மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

ஒருபுறம் மழை பொய்த்து போனது என்றால், மற்றொரு புறத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தர மறுத்து வரும் நிலையால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து இன்றி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாமல் மூடும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரியமங்கலம், விக்கிரபாண்டியம், சேந்தமங்கலம், புழுதிக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கந்துவட்டிக்கு கடன்வாங்கி சாகுபடி செய்த சம்பா பயிரை காப்பாற்ற பாசன நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் காய்ந்து கருகிவரும் சம்பா பயிர்களை பாத்து பாத்து கண்ணீர் விட்டு கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் விவசாயிகளில் பயிரை பாத்துபாத்து கதறிஅழுத நிலையில் தற்போது விவசாயிகளின் கண்களில் கண்ணீரும் வற்றிவிட்டது. இருந்தாலும் விவசாயத்திற்காக வாங்கிய கடனை திரும்பசெலுத்த வேண்டும், பயிர் மகசூலை வைத்து வரும் மாதங்களில் குடும்பத்தின் வரவுசெலவுகளை கவனிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், தற்போது விவசாயிகள் சம்பா பயிரை காப்பாற்றிட அருகில் உள்ள வீடுகள், குளம் குட்டைகளில் தேங்கிகிடக்கும் நீரை குடத்தில் பிடித்து பயிருக்கு உயிர் தண்ணீராக தெளித்து பயிரை காப்பாற்றிட தினம்தினம் போராடி வருகின்றனர்.

பருவமழையும் பொய்த்தது, மேட்டூர் அணையும் வரண்டது என்ற நிலையை உணர்ந்து தமிழக அரசு தற்போது டெல்டா பகுதி விவசாயிகள் படும் துயரத்தை உணர்ந்து காய்ந்து கருகிவரும் சம்பாபயிர்க்கு நாள் ஒன்றுக்கு விவசாயிகள் கூலிக்கு தொழிலாளிகளை வைத்துகொண்டு 20 குடம், 30 குடம் என்ற அளவில் 3 அல்லது 4 நாட்கள் இடைவெளியில் தண்ணீரை வயல்களில் தெளித்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். ஆறுதல் மட்டுமே விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வாகாது.

எனவே தமிழக அரசு தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வரும் சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகளின் நலன்கருதி ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்கவேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?