‘எங்களோட கால் வயிறுதான் நிரம்பி இருக்கு’… தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் மீது விவசாயிகள் சங்கம் அதிருப்தி..!!!

Author: Babu Lakshmanan
20 February 2024, 4:03 pm

தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு போதுமான பட்ஜெட்டாக இல்லை எனவும், விவசாயிகளுக்கு கால் வயிறுதான் நிரம்பி உள்ளதாக, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி கோவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் வேளாண் பட்ஜெட் குறித்து கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் விடுபட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். மேலும், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம், உயிர்சேதம் ஆகியவற்றிக்கு நிதி ஒதுக்கீடு இடம் பெறவில்லை என கூறிய அவர், வேளாண் தொடர்பான பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக விவசாயிகள் தொடர்பானவர்களிடம் ஆலோசனை நடத்தியிருந்தால் ஒட்டு மொத்த விவசாயிகளுக்கு பயனுள்ள பட்ஜெட்டாக அமையும் என தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவிலேயே வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் போட்டது தமிழக அரசுதான் என்று கூறிய அவர், அதனை தாம் எப்போதும் வரவேற்பதாக தெரிவித்தார். தென்னை தொடர்பான விவசாயித்திற்கு அறிவித்துள்ள 36 கோடி குறைவாக இருப்பதாக கூறிய அவர், மற்ற சில ஒதுக்கீடுகளை வரவேற்பதாகவும், மண் புழு உரம் தயாரிக்க, உழவர் சந்தை மேம்பாட்டுக்கு அறிவிப்பு, பசுந்தீவன உரத்திற்கு ஒதுக்கியுள்ள நிதி போன்ற அறிவிப்புகள் வரவேற்பை பெற்றிருந்தாலும், கரும்புக்கு ஒரு கிலோவிற்கு 250 ரூபாய் வீதம் ஒரு டன்னுக்கு 250 கோடி ஒதுக்கீடோடு முடித்துள்ளதாக கூறினார்.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் அறிவிப்பு விவசாயிகளுக்கு கால் வயிறுதான் நிரம்பி உள்ளதாகவும், முக்கால் வயிறு காலியாகத்தான் இருப்பதாக வேதனை தெரிவித்த அவர், தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு போதுமான பட்ஜெட்டாக இல்லை என தெரிவித்தார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!