‘500 நாளாச்சு.. என்ன பண்ணுனீங்க’… காங்., வேட்பாளர் வாகனத்தை மறித்து விவசாயிகள் வாக்குவாதம்!!
Author: Babu Lakshmanan13 April 2024, 4:38 pm
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தை மறித்து கரும்பு விவசாயிகள் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதா இன்று பாபநாசம் வட்டத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் மருத்துவக்குடி பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாகனத்தில் நின்றபடிச் சென்று வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார்.
மேலும் படிக்க: அண்ணாமலை ஒன்றும் சூப்பர் ஸ்டார் கிடையாது… கிழிகிழி-னு கிழிச்சிடுவேன்… செல்லூர் ராஜு எச்சரிக்கை…!!
அப்போது, அங்கு வந்த திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த 501 நாட்களாக போராடி வரும் விவசாயிகள், காங்கிரஸ் வேட்பாளர் சுதா வாக்குச் சேகரித்துச் சென்ற வாகனத்தை திடீரென மறித்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.
வாழ்வாதாரத்தை இழந்து சுமார் 501 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களது போராட்டத்திற்கு இதுவரையும் எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை என கூறி வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு காங்கிரஸ் வேட்பாளரான சுதா பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி விவசாயிகளிடம் பேசும் போது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு, தேர்தலுக்குப் பிறகு முடிவு எட்டப்படும் எனக் கூறி, விவசாயிகளை சமாதானம் செய்ததை அடுத்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.