‘பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக’: தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!
Author: Rajesh11 April 2022, 12:30 pm
கோவை: பெட்ரோல், டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் “நவீன தொழில் நுட்பங்களை விவசாய தொழிலில் பயன்படுத்தும் போது டிராக்டர், ட்ரில்லர் ஜே.சி.பி, டிப்பர் போன்றவை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
தற்போது பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாய பொருட்கள் மற்றும் உரங்களின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்திருந்தனர்
தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.