கழன்ற கட்டில் போல்டு.. தந்தை, மகன் இறந்த பரிதாபம்!

Author: Hariharasudhan
5 November 2024, 12:00 pm

திண்டுக்கல் அருகே இரும்புக் கட்டில் கால் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (35). தையல் தொழில் செய்து வரும் இவருக்கு லோகேஸ்வரி (30) என்ற மனைவியும், கார்த்திக் ரோஷன் (9) மற்றும் யஸ்வந்த் (6) என இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில், மனைவி லோகேஸ்வரி, நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.3) இரவு வழக்கம் போல் கோபி கிருஷ்ணனும், மகன் கார்த்திக்கும் டிவி பார்த்துக் கொண்டு வீட்டின் மாடியில் உள்ள இரும்புக் கட்டிலில் தூங்கி உள்ளனர். அப்போது லோகேஸ்வரி மருத்துவமனைக்கு பணிக்குச் செல்வதற்காக புறப்பட்டு உள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் மாடியில் இருந்து இருவரும் வராத காரணத்தால், அவர்களைத் தேடி மாடிக்குச் சென்று உள்ளார்.

அப்போது தனது கணவன், மகன் இருவரும் இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். தொடர்ந்து, அவர் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இரும்புக் கட்டில் கால்களில் உள்ள நான்கு போல்ட்டுகளும் இல்லாததால், இரும்புக் கட்டில் கால் முறிந்து விழுந்துள்ளது, இதனால் கட்டிலின் மேல் பகுதியில் உள்ள இடைவெளியில் இருவரின் கழுத்துப் பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : இறுக்கிப் பிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்.. அதிபர் கட்டிலில் அமரப்போவது யார்?

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 214

    0

    0