8 மாத குழந்தைக்கு விஷம்.. தகாத உறவால் கொலைகாரனாக மாறிய தந்தை!
Author: Hariharasudhan6 March 2025, 11:02 am
தென்காசி அருகே தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமார் (37) – முருகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 7 வயது மற்றும் 8 மாதம் நிறைவடைந்த இரு பெண் குழந்தைகள் உள்ளன. இதில், முத்துக்குமார் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இதனிடையே, கடந்த சில மாதங்களாக தம்பதி இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
அப்போது முருகேஸ்வரி, கணவரின் கையில் இருந்த விஷப் பாட்டிலை தட்டிவிட்டுள்ளார். பின்னர், குழந்தையை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சற்று தணிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக கரிவலம்வந்தநல்லூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், முத்துக்குமாருக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்து வந்ததாகவும், இதனை வைத்தே தம்பதி இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.