காதலில் விழுந்த மகள்…கழுத்தை நெரித்து தந்தை கொலை முயற்சி: உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!!

Author: Rajesh
17 May 2022, 12:29 pm

திருவாரூர்: சேந்தமங்கலம் அருகே தனது பேச்சை மீறி காதலித்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே சிதம்பரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் துர்கா இந்த தம்பதியினரின் மகள் கிருஷ்ணகுமாரி. கிருஷ்ணகுமாரியும் கேக்கரை பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவது கிருஷ்ணகுமாரியின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. அதனையடுத்து கிருஷ்ணகுமாரியின் தந்தை அய்யப்பன் பலமுறை தனது மகளை கண்டித்துள்ளார். தந்தையின் கண்டிப்பை மீறியும் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகுமாரியின் வீட்டின் வாசலில் கிருஷ்ணகுமாரியும் ஜெகனும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த அய்யப்பன் இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

தனது மகள் தாம் சொல்வதை கேட்கவில்லை என்ற ஆத்திரத்தில் வீட்டிலிருந்த நைலான் கயிற்றினால் தனது மகளின் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி செய்துள்ளார். கிருஷ்ணகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணகுமாரியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிருஷ்ணகுமாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் கிருஷ்ணகுமாரியின் தாயார் துர்கா திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அய்யப்பன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அய்யப்பனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மகள் காதலித்ததால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்ய முயற்சி செய்திருப்பது திருவாரூரில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Ajith Kumar Dubai 24H Car Race interview இதுக்குமேல என்ன வேணும்…விடாமுயற்சி COMING SOON…துபாயில் அஜித் சொன்ன தகவலால் வைரலாகும் வீடியோ..!