கிணற்றில் மிதந்த பெண் சடலம்…2 மணி நேரம் கழித்து மிதந்த ஆண் சடலம் : பகீர் கிளப்பிய திருப்பூர் சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2022, 10:11 pm
திருப்பூர் : பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த ஆண் , பெண் இருவரது சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கமேட்டிலிருந்து ஆத்துப்பாளையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பயன்பாட்டில் இல்லாத கிணறு ஒன்று இருந்துள்ளது.
இதில் அவ்வப்போது இளைஞர்கள் மட்டும் குளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய சூழ் நிலையில் இன்று காலை அவ்வழியே செல்பவர்கள் கிணற்றில் பெண் சடலம் மிதப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் .
இந்நிலையில் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் மீண்டும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இருவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் 25 வயது மதிக்கத்தக்க நபர்கள் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் யார் , எங்கிருந்து வந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கிணற்றுக்கு அருகாமையில் உள்ள பேக்கரி ஒன்றில் சந்தேகப்படும்படியான இருசக்கர வாகனம் ஒன்று காலை முதல் நின்று கொண்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.