100 ஆண்டுகள் பழமையான பொள்ளாச்சி நகராட்சியில் முதல்முறையாக பெண் ஓட்டுநர்: திறமைக்கு வாய்ப்பளித்த நகராட்சி தலைவர்..!!

Author: Rajesh
26 April 2022, 5:33 pm

கோவை: 100 ஆண்டுகள் பழமையான பொள்ளாச்சி நகராட்சிக்கு நகர்மன்ற தலைவரின் முயற்சியால் முதல் முறையாக பெண் ஓட்டுனருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டை சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் என 4 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த நாகராஜ் இறந்துவிட்டார். குழந்தைகளை வளர்க்கவும், குடும்பத்தை நடத்தவும் வழி தெரியாமல் தவித்தார் சாந்தி. கிடைத்த கூலி வேலைகளை செய்த சாந்தி வறுமையில் சிக்கித்தவித்தார்.
அப்போதுதான் துணிந்து ஒரு முடிவை எடுத்தார். தனக்கு மிகவும் விருப்பமான டிரைவிங் தொழிலை தேர்ந்தெடுத்து, யாருடைய உதவியும் இல்லாமல் தானே சுயமாக கற்றுக் கொண்டார். முறைப்படி உரிமமும் பெற்றார். வாடகை கார்கள் சரக்கு வாகனங்கள் என தனக்கு வாய்ப்பு கிடைக்கும் வாகனங்களை ஓட்டி வருமானம் ஈட்ட ஆரம்பித்தார்.

இந்நிலையில்தான் சாந்தியின் திறமை குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள பொள்ளாச்சி நகராட்சியின் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணனனுக்கு தெரியவந்தது. 100 ஆண்டு பழமையான பொள்ளாச்சி நகராட்சிக்கு முதல் பெண் ஓட்டுனர் என்ற வாய்ப்பை சாந்திக்கு நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதுகுறித்து சாந்தி கூறுகையில், சூழ்நிலை காரணமாக கணவரை பிரிந்து நான்கு குழந்தைகளுடன் வசிக்கிறேன். கூலி வேலை செய்ததில் கிடைத்த வருமானத்தைக்கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை. அப்போதுதான் எனக்கு பிடித்த டிரைவர் வேலையை செய்வது என துணிந்து முடிவெடுத்தேன். சுயமாக டிரைவிங் கற்று, பகல் இரவு பார்க்காமல் சரக்கு வாகனம், பயணிகள் வாகனம் அனைத்தையும் ஓட்டுகிறேன்.

கொச்சின், பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் வாகனம் ஓட்டி உள்ளேன். கடந்த பத்தாண்டுகளாக சிறு விபத்து கூட இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருகிறேன். கொரோனா காலத்தில் மிகவும் சிரமப்பட்டேன். வீட்டு வாடகை மட்டுமின்றி சாப்பாட்டுக்கு கூட சிரமம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் இருந்தவர்களிடம், நகராட்சியில் டிரைவர் வாய்ப்பு கொடுங்கள் என்று பலமுறை நடந்தேன். ஆனால் வாய்ப்பு கொடுக்காமல் இழுத்தடித்தார்கள்.

ஆனால் தற்போதைய முதல்வர் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டேன். அவர் என்னைப் பற்றி விசாரித்து விட்டு உடனடியாக டிரைவர் பணி வாய்ப்பை வழங்கினார்கள், பெண்கள் எல்லா துறையிலும் சாதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

  • Tribute to late actors in Madha Gaja Raja movie பெரும் சோகத்தில் ரிலீஸ் ஆகும் மதகஜராஜா…படத்தில் நடித்த பல பிரபலங்களின் நிலைமை என்ன ஆச்சுன்னு தெரியுமா ..!
  • Views: - 1227

    0

    0