உண்டியல் காணிக்கையை எண்ணும் போது நூதனமாக தங்கம் திருடிய பெண் ஊழியர் : பழனி கோவிலில் பரபரப்பு… அதிகாரிகள் மெத்தனம்??
Author: Udayachandran RadhaKrishnan20 May 2022, 2:30 pm
பழனி : மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது தங்கநகைகளை திருடிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் நிரம்பியதும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இதன்படி கடந்த புதன்கிழமை பழனி கோவில் கார்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.
அப்போது பழனி கோவிலில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் பணிபுரியும் பாக்கியலட்சுமி (வயது 44) என்ற ஊழியர் ஒருவர் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் போது காலில் ரப்பர்பேண்ட் வைத்து 10.8 கிராம் அளவுள்ள தங்க நகையை நூதனமாக திருடியுள்ளார்.
அப்போது உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து பாக்கியலட்சுமியை கோவில் ஊழியர்கள் சோதனையிட்டதில் காலில் நகையை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாக்கியலட்சுமி மீது அடிவாரம் காவல் நிலையத்தில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது கோவில் இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில், சிசிடிவி காமிரா கண்காணிப்பில் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த மூன்று முறை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது கோவில் ஊழியர் ஒருவர் 90ஆயிரம் ரூபாய் திருடியதும், கடந்த மாதம் தங்கத்தினால் ஆன வேல் ஒன்றை துப்புரவு பணியாளர் கணேசன் என்பவர் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பெண் ஒருவர் திருடி அகப்பட்டு சிறைக்கு சென்றுள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி சரியாக நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் தற்போது பக்தர்களிடையே எழுந்துள்ளது.