தடுப்பூசி செலுத்திய பெண் சிசு மர்ம மரணம்.. பிறந்து 46 நாட்களே ஆன நிலையில் சோகம்… பெண் சிசு கொலையா..? போலீசார் விசாரணை..!!
Author: Babu Lakshmanan30 September 2023, 4:49 pm
கிருஷ்ணகிரி ; போச்சம்பள்ளி அருகே பிறந்து 46 நாட்களே ஆன நிலையில், தடுப்பூசி செலுத்திய பெண் சிசு மர்மமான முறையில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் அருகே உள்ள போக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி – மணிமேகலை என்பவருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே நிவாசினி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக கர்ப்பமான மணிமேகலைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு மணிமேகலையின் இரண்டாவது பெண் குழந்தைக்கு பாளேத்தோட்டம் கிராமப்புற செவிலியர் மீனாட்சி என்பவர் தடுப்பூசி செலுத்தி உள்ளார். இதில் குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை குழந்தைக்கு காய்ச்சல் அதிகமான நிலையில் குழந்தையை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது, குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் கூறி உள்ளனர். பின்னர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனை சவுக்கிடங்கில் வைத்தனர்.
பின்னர் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பெயரில் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அமரர் ஊர்தி மூலம் அனுப்பி வைத்தனர். இதில் குழந்தையின் பெற்றோர் தரப்பில் கூறியதாவது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய மருந்தானது காலாவதி ஆகிவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
ஆனால் மருத்துவ வட்டாரங்கள் கூறுகையில், “பிறந்த குழந்தையானது இரண்டாவது பெண் குழந்தை என்பதால் இது பெண் சிசு கொலையாக இருக்கும். இதனை பிரேத பரிசோதனை செய்த பின்னரே உறுதியாகும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சந்தூர் மருத்துவ அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தடுப்பூத் தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை பலியானதா..? அல்லது பெண் சிசு கொலையா..? என்ற பல்வேறு கோணங்களில் போச்சம்பள்ளி போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர்.