பெண் எம்.எல்.ஏவுக்கு முகநூல் மூலமாக ஆபாச குறுஞ்செய்தி : மார்ஃபிங் போட்டோ வெளியிடுவதாக மிரட்டல்…

Author: kavin kumar
14 February 2022, 2:24 pm

புதுச்சேரி : மலேசியா பெண் எம்.எல்.ஏவுக்கு முகநூல் மூலமாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புதுச்சேரி நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி ஆளுநரிடம் பெண் எம்.எல்.ஏ புகார் கொடுத்துள்ளார்

மலேசியா நாட்டின் பகாங் மாநிலம், சபாய் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் தமிழச்சி காமாட்சி துரைராஜூ. மலேசியவாழ் தமிழரான இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார். அவரது அறிமுகத்தை ஏற்றுக்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் அவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். பதிலுக்கு அந்த மர்ம நபரும் வரவேற்று பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதன்பிறகு பணி நிமித்தம் காரணமாக தனது முகநூல் பக்கத்தை தமிழச்சி காமாட்சி துரைராஜூ பார்க்காமல் இருந்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து அந்த மர்மநபர் முகநூல் பக்கத்தில் சட்டப்பேரவை உறுப்பினருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் ஆபாச பதிவுகளை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் முகநூல் மெசேஞ்சர் மூலம் கால்செய்து தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். இதனை கவனித்த  சட்டப்பேரவை உறுப்பினரின் உதவியாளர், இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபரை, முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த மர்ம நபர் தனது முகநூல் பக்கத்தை பிளாக் செய்திருக்கிறார். 

மேலும், தமிழச்சி காமாட்சி துரைராஜூவின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பகிர்வேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சட்டப்பேரவை உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராஜூ, இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மர்ம நபர் பதிவிட்ட முகநூல் பதிவுகளுடன், ஆடியோ பதிவு மூலம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் அந்த ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது ‘‘மலோசியா நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளேன். தங்களுக்கு அனுப்பியுள்ள பதிவுகளை எனக்கு தொடர்ந்து முகநூல் பக்கத்தில் ஒருவர் அனுப்பி வருகிறார். இந்த பதிவுகளை பார்க்கும்போது அந்த நபர் அத்துமீறலில் ஈடுபடுவது எனக்கு தெரிகிறது. 

இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள நண்பர்கள் சிலரிடம் நான் பேசியபோது உங்களுடைய தொடர்பு எண்களை எனக்கு கொடுத்தனர். காரணம் அந்த மர்ம நபர் புதுச்சேரி சேர்ந்தவர். தயவு செய்து, இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். மலேசியா நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள தமிழ்பெண்ணான எனக்கே இதுபோன்ற நிலை என்றால், அவரது ஊரில் என்ன செய்வார் என்பதை யோசித்து பார்க்கவே முடியவில்லை. இதனை வளரவிடக்கூடாது. உங்களைப் போன்ற, என்னை போன்ற பெண்கள், இதுபோன்ற இடங்களில் கால்பதிக்க முடியகிறது என்றால், 

அதற்கு நாம் கடந்து வந்திருக்கிறன்ற இன்னல்கள் எளிமையாக இருக்காது என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே இதனை கருத்தில் கொண்டு அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.’’இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த புகார் தொடர்பாக ஆளுநர் கவனத்திற்கு சென்றதா இல்லையா என தெரியவில்லை மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu