புயல் கரையைக் கடக்க டைம் ஆகலாம்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!
Author: Hariharasudhan30 November 2024, 5:41 pm
ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) இன்று மாலையே கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று பிற்பகல் ஃபெஞ்சல் புயல் (fengal Cyclone) உருவானது. இதனால், சென்னை உள்ளிட்ட அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியுற்றனர்.
இதனிடையே, இந்த ஃபெஞ்சால் புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், புயல் மெதுவாக நகர்வதால் நள்ளிரவு அல்லது நாளை காலையில் தான் கரையைக் கடக்கும் என தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தெற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று (நவ.30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே, புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும். இந்தப் புயல் காரணமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, புயல் முழுமையாக கரையைக் கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம்.
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதி கனமழை பெய்யும். அதேபோல், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும்.
இதையும் படிங்க: 47 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் புயல் மழை… கொங்கு மண்டலத்தை மிரட்டும் ஃபெஞ்சல்!
மேலும், புயல் கரையைக் கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரை 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். சென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும் ஒரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 25 டிகிசி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிசி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.