கடுப்பான திமுக தலைமை…. தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அதிரடி மாற்றம் : முடிவுக்கு வந்த உட்கட்சி பூசல்!!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2023, 8:36 am
தென்காசி மாவட்ட திமுகவை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்துள்ளது திமுக தலைமை. அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட திமுகவுக்கு சிவபத்மநாதன் மாவட்டச் செயலாளராக உள்ளார். தென்காசி வடக்கு மாவட்ட திமுகவுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜா மாவட்டச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து தென்காசி மாவட்ட மகளிரணி சார்பில் நேற்றைய தினம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்றுப் பேசினார்.
அவர் பேசி முடித்த பின்னர் மழை வருவது போல இருப்பதால், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடருங்கள் என்று கூறி விட்டு மேடையில் இருந்து இறங்க முயன்றார். அப்போது, திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனை ஒரு பிடி பிடித்தார் தென்காசி மாவட்ட சேர்மன் தமிழ்ச்செல்வி.
கட்சியில் இருக்கும் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை, இந்த நிலையில் மணிப்பூர் பெண்களுக்கு நியாயம் கேட்டு போராடுகிறாராம்.. மணிப்பூரை பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? என்று கூறி மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனை ஒருமையில் பேசியுள்ளார்.
அப்போது மைக்கை பறித்துள்ளார் சிவபத்மநாதன். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தென்காசி திமுக மாவட்டச் செயலாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த பொ.சிவபத்மநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக தென்காசி தெற்கு மாவட்ட புதிய பொறுப்பாளராக, சுரண்டை நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலன் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் நடைபெற்ற மகளிரணி ஆர்ப்பாட்டத்தின்போது, பெண் நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தென்காசி மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.