சொந்த தொகுதியில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போராட்டம்…. காணாமல் போன கூட்டம் : வெறும் 110 பேர் மட்டுமே பங்கேற்பு.. ஆதரவாளர்கள் அதிர்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan1 July 2022, 4:11 pm
தேனி : ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு ஆதரவாக 110 பேர் மட்டுமே கலந்து கொண்டதால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியில் தேவர் சிலை அருகே அதிமுக அமைப்புச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்திருந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மூன்றாவது முறையாக போடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள நிலையில், அவரது சொந்த தொகுதியில் அவருக்கு ஆதரவாக பெருங்கூட்டம் திரளலாம் என்று கருதி போடி டி.எஸ்.பி. தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு திரண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சரியாக 10.30 ஆர்ப்பாட்டம் தொடங்கியது.எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் சேராததால் அங்கிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 14 பெண்கள் உட்பட மொத்தம் 110 பேர் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
சுமார் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட போடி நகராட்சியில், தொடர்ச்சியாக மூன்று முறை எம்.எல்.ஏவாக உள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக வெறும் 110 பேர் மட்டுமே திரண்டது கட்சியினர் மட்டுமல்லாது அவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிலரைத் தவிர யாரும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களர்கள் இல்லை. இதிலிருந்து கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக திரு. எடப்பாடி பழனிச்சாமியைத்தான் விரும்புகிறார்கள், அதனால் தான் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டத்தில் யாரும் வந்து கலந்து கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சொந்த தொகுதியில், அதுவும் 3 முறை மக்களால்தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஓ பன்னீர் செல்வதுக்கு ஆதரவு குறைந்து வருவது அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்தத் தொகுதியில் கூட ஓபிஎஸ் தரப்பினருக்கு செல்வாக்கு இல்லை என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.