’ஏன் அவர் மீது வழக்கு பதியவில்லை?’.. போலீஸ் ஆவணங்களை கிழித்தெறிந்தாரா பாமக நிர்வாகி? கோவையில் பரபரப்பு!
Author: Hariharasudhan13 December 2024, 5:56 pm
கோவை சைபர் கிரைம் அலுவலக பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாமக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், கணபதி அடுத்த புதூரைச் சேர்ந்தவர் அசோக் ஸ்ரீநிதி (35). இவர் பாமக நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், “யூடியூப் சேனல் மூலம் ஒருவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் துரிதப்படுத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில், இது தொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவரைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் ஜாமீன் மூலம் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், நேற்று கோவை மாநகர சைபர் கிரைம் அலுவலகத்துக்கு அசோக் ஸ்ரீநிதி வந்து உள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு கொலை மிரட்டல்.. திமுக நிர்வாகி மீது தவெக பரபரப்பு புகார்!
அப்போது, அங்கிருந்த பெண் உதவி ஆய்வாளர் சுகன்யாவிடம், “முகமது இப்ராஹிம் மீது ஏன் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யவில்லை? அவர் ஏன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்?” எனக் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து அவர், அந்த வழக்கின் சில ஆவணங்களைக் கிழித்து எறிந்ததாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், பெண் உதவி ஆய்வாளர் சுகன்யாவை தகாத வார்த்தைகளால் பேசியும், கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர், இது குறித்து பெண் உதவி ஆய்வாளர் சுகன்யா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்தப் புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.