ஜிஎஸ்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழகத்தில் ஜிஎஸ்டி தீர்ப்பாயம் : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
1 July 2022, 8:57 am

ஜி.எஸ்.டி.யில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட இருப்பதாக தொழில் முனைவோர் மத்தியில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

கோவையில் சிஐஐ சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். அப்போது, தொழில் முனைவோர் மத்தியில் பேசிய அவர், தொழில்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முதலமைச்சர் ஸ்டாலின், சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், ஜி.எஸ்.டி. சேவை மையத்தில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தொழில் முனைவோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படும்‌ எனவும், மதுரையில் அடுத்த ஜி‌.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளதாகக் கூறிய அவர், தற்போது 100 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி குறித்து மதுரை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும், என்றார்.

தொழில்துறையினரின் கோரிக்கைகளும் அந்த கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று கூறிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேராததால், 80 சதவீத நிதி முழுமையாக தொழில் முனைவோரை சென்று சேரவில்லை எனவும், ஜி.எஸ்.டி.யில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தொழில் நிறுவனங்கள் அருகே தங்கும் விடுதிகள் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!